நமசிவாய பதிகம் (திருநாவுக்கரசர் அருளியது):

நமசிவாய பதிகம் (திருநாவுக்கரசர் அருளியது):
  1. மறை (வேதம்) மொழியும் சொற்களுக்கு பொருளாக இருப்பவனும், சோதி வடிவினனாகவும் விளங்கும் சிவபெருமானுடைய திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழும் அடியவர்க்கு, கல்லில் இணைத்துக் கட்டி கடலில் தள்ளப்படும் நிலை வரினும் திருஐந்தெழுத்து பெரும் துணையாய் நின்று காக்கும். 
  2. பூவுக்கு சிறப்பினைத் தருவது தாமரை (கலைமகளும் திருமகளும் உறைவதால்). சிவபெருமானின் பூசைக்கு 'பஞ்ச கௌவியம்' அளிப்பது பசுவிற்கு சிறப்பினை நல்குவது. செங்கோல் தவறாது ஆட்சி புரிவது மன்னனுக்கு சிறப்பு சேர்க்க வல்லது. அது போன்று திருஐந்தெழுத்தை செபிப்பதே நாவிற்கு சிறப்பினை நல்க வல்லது.
  3. விண் உயரத்துக்கு விறகுக் கட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டு இருப்பினும், அவற்றை முழுவதும் எரித்து சாம்பலாக்க ஒரு சிறு தீப்பொறியே போதுமானது. அது போன்று, பல கோடிப் பிறவிகளில் சேர்த்து வந்துள்ள வினைக் குப்பைகளை முழுவதும் வேரறுத்து உய்விப்பது திருஐந்தெழுத்து. 
  4. எத்தகு துன்பம் வரினும் பெருமானை அன்றி மற்றோரிடத்து 'எம் துன்பத்தை நீக்குவாய்' என்று முறையிட்டு வேண்ட மாட்டோம். இராவணன் சிக்குண்டதைப் போல் மலையில் கீழ் அகப்பட்டுக் கிடப்பினும், திருவருளுக்கு நம்மை உரியராக்கி நம் நடுக்கத்தைப் போக்கி உய்விப்பது திருஐந்தெழுத்தே.
  5. பெருமானை வணங்கி விரதம் மேற்கொள்ளும் அன்பர்களுக்கு அணியாகத் திகழ்வது திருநீறு. அந்தணர்க்கு அணியாவது நான்மறை; ஆறு அங்கங்களை ஓதுதல். சிவபெருமானின் திருமுடிக்கு அணியாய்த் திகழ்வது பிறைச் சந்திரன். அடியவர்க்கு அணியாய்த் திகழ்வது திருஐந்தெழுத்து. 
  6. இறைவன் ஒரு சார்பு இல்லாது அனைவர்க்கும் அருள் புரியும் தன்மையினன். எனினும் தன் திருவடிகளைப் பற்றுக் கோடாகப் பற்றுவோர்க்கு மட்டுமே முக்தி நிலையைத் தந்தருள்வான். ஆகம விதிப்படி ஆச்சாரம் - ஒழுக்கம் இவைகளைக் கொண்டு வாழ்பவர்க்கும், அவற்றில் இருந்து நீங்கி நிற்பவர்க்கும், அவரவர் தன்மைக்கு ஏற்ப திருவருளைப் பெற்றுத் தருவது திருஐந்தெழுத்தே. 
  7. சிவபிரானைப் போற்றும் அடியவர் திருக்கூட்டத்தை தரிசிக்கவும், அப்பெருமக்கள் எந்நேரமும் ஓதும் திருஐந்தெழுத்தைக் கேட்டு உய்வு பெறவும் பெரும் ஆவல் கொண்டேன். விரைந்து அவ்வடியவர்களிடம் சென்ற என்னை திருஐந்தெழுத்து நாடிப் பற்றியது. 
  8. புற இருளைப் போக்கும் விளக்கைப் போல, அக இருளாகிய அறியாமையைப் போக்கி உள்ளத்தில் ஞான விளக்கினை ஏற்றும் பெற்றியை உடையது திருஐந்தெழுத்து. 
  9. முக்தி நெறியை காண்பித்து அருள்பவர் மூல முதல்வனான முக்கண் மூர்த்தியாவார். அவ்வழியை பற்றுக் கோடாகக் கொண்டு, அப்பெருமானின் திருவடிகளை அடைய முனையும் அனபர்களுக்கு அரும் துணையாய் விளங்கி உய்விப்பது திருஐந்தெழுத்து. 
  10. மானை கையில் எந்திய உமையொரு பாகனின் திருவடிகளை உள்ளம் பொருந்துமாறு தொழுவதற்கு, திருஐந்தெழுத்தைப் போற்றும் இத்திருப்பாடல்களை ஓதும் அடியவர்களை எவ்வித துன்பமும் நெருங்காது. 


கருத்துகள்