நளவெண்பா

நளவெண்பா
தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது
வேல்வேந்தனான வீமராசனின் புரோகிதனுக்கு, “என்னைப் பெரிய காட்டில் கைவிட்டுப் பிரிந்து மனமாறிய வேந்தனை நீ தேடிச் சென்று அறிவாயாக” என்று கூறினாள். மேலும் கருமையான இருளில் பாழடைந்த மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் காதலியைக் கைவிட்டுப் பிரிதல் தேர்வேந்தனுக்குத் தகுமோ என்று சொன்னால் அதனைக் கேட்டு மறுமொழி கூறுபவரை அறிந்து வருக என்று நளனை அறியும் வழியைப் புரோகிதனுக்கு உரைத்தாள்.
புரோகிதன் அயோத்தி அடைதல்
மின்னல் உடைய மலைகளும், கடல்களும், கடலைச் சூழ்ந்த நாடுகளும், காடுகளுமான குறிஞ்சி, நெய்தல், மருதம், முல்லை என்ற நால் வகை நிலத்திலும் புரோகிதன் நளனைத் தேடி, இறுதியில் அயோத்தி நகரை அடைந்தான்.
நளன் மறுமொழி
கருமையான இருளில் பாழடைந்த மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தன் காதலியைக் கைவிட்டுப் பிரிதல் தேர்வேந்தனுக்குத் தகுமோ என்ற புரோகிதனின் வினாவினை நளன் கேட்டான். உடனே , காதலியை உறக்கத்திலே விட்டு பிரிந்தது பழைய விதியின் பயனாகும். வெண்கொற்றக்குடையை உடைய இராமபிரான் திருமகளான சீதாதேவியை தன் மனம் மாறுபட்டு காட்டில் கைவிட்டுச் சென்றான் என்று ஐயம் கொள்ளாதே. என்று மறுமொழி கூறினான்.
தமயந்தி புரோகிதனை வினாவியது
நளனின் மறுமொழியைக் கேட்ட புரோகிதன் தமயந்தியைக் கண்டான். தன் கண்ணீரால் மார்பை நனைத்த தமயந்தி புரோகிதனை நோக்கி எங்கு தங்கினாய்? எத்திசைகளில் சென்று  கங்கை  நாட்டிற்குத் தலைவனான நளனைத் தேடினாய்? அவனை எங்காவது சந்தித்தாயா? என்று கேள்விகளை அடுக்கினாள்.
புரோகிதன் மறுமொழி
பூணூல் அணிந்த புரோகிதன் ‘’மலர் சூடிய தமயந்தியே, நான் சந்தித்த ஒருவன் தன் வாக்கினால் மன்னன் நளனைப்  போலவே உள்ளான். ஆனால் அவன் உடல் நம் மன்னனைப் போல் இல்லை. எனக்கு மறுமொழி கூறியவன் சிறந்த தேர்ப்பாகன்” என்று கூறினான்.
நளனை அறிய தமயந்தியின் சூழ்ச்சி
புரோகிதன் கூறியதைக் கேட்ட தமயந்தி “அந்தணனே வீமன் திருமகள் மீண்டும் ஒரு சுயம்வரத்தை மேற்கொண்டாள் என்று அயோத்தியில் கூறு. அவ்வாறு கூறினால்  படை வேந்தன் தேரில் வருவான்” என்று புரோகிதனிடம் கூறி அனுப்பினாள்.
இருதுபன்னனும் நளனும்
தமயந்தி சொன்னபடியே புரோகிதனும் அயோத்தி சென்று அயோத்தி மன்னனாகிய இருதுபன்னனை அடைந்து, ‘’என் அரசன் மகளுக்கு இரண்டாவது சுயம்வரம் நாளை நடைபெறும்’’ என்று அறிவித்தான்.
நளன், ‘’மீன் பிடிப்பிடிப்பவர் வைத்துள்ள பறியினைக் கிழித்துப் பருத்த வரால் மீன்கள் நெற்பயிரிடையே ஓடும் நாட்டிற்குத் தலைவனே, தமயந்தி குறையாத கற்பினை உடையவள்,  தன் கணவனைத் தவிர பிறரை நேசிக்காதவள், அவள் இவ்வாறு கூற வாய்ப்புள்ளதோ?’’ என்று தன் சந்தேகத்தைக் கூறினான்.
ஆனால் மதம் கொண்ட யானையைப் போன்ற  அயோத்தி மன்னன் புரோகிதனின் சொற்களை மட்டுமே நினைத்தான். ‘’முன்னர் சுயம்வரம் நடைபெற்ற நாளில் தமயந்தி என்மேல் எறிந்த பூமாலை தவறி நளன் கழுத்தில் விழுந்தது. அந்தப் பிழையினால்தான் இப்போது மீண்டும் ஒரு சுயம்வரம் நடைபெறுகிறது’’ என்றான்.
நளன் தான் முன் செய்த தீவினையால் இவ்வாறு நிகழ்கின்றதோ? அல்லது மலர் சூடிய தமயந்தி தன்னைக் கண்டறிய இவ்வாறு சூழ்ச்சி செய்கின்றாளோ? எவ்வாறாயினும் தன் குலத்திற்கு ஏற்காத இச்சொற்கள் ஏற்புடையதா? எனப் பலவாறு தயங்கினான். இறுதியில் அரசனுக்குப் பணிபுரியும் கடமையினை மேற்கொண்டுவிட்டேன். அவன் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்று தன் மனத்தைத் தேற்றிக் கொண்டான். அரசத்தேரில் குதிரைகளைப் பூட்டி புறப்படத் தயாரானான்.
நளன் தேர் ஓட்டிய சிறப்பு
மலர்களை அணிந்த கூந்தலை உடைய தமயந்தியின் செயல்களைத் தன் உள்ளத்தே நினைத்து கொண்டே நளன் தேரைச் செலுத்தினான். அந்தத் தேரானது அவன் பழவினை வந்து நெருக்கியதால் தமயந்தி மீது அன்பு கொண்ட அயோத்தி மன்ன்னின் சிந்தையை விட மிக விரைவாகச் சென்றது.
பகைவர்க்குத் தோல்வியை மட்டுமே தரும் அயோத்தி மன்னன் தேரில் வரும்போது அவன் மேலாடை நழுவி கீழே விழுந்த்து. என் மேலாடை வீழ்ந்தது எடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதற்குள், நளன் தன் கோலால் செலுத்திய தேர் நாலாறு காதம் கடந்தது.
கலி நீங்கியது
வண்டுகள் ஆர்ப்பரிக்கும்  வயல்களை உடைய உழவர் நாட்டை ஆள்பவன் சந்திரன் சுவர்க்கி. அவன் குளிர்ச்சி பொருந்திய மாலையினை சூடியவன். அவனைப் போற்றும் பாவலர்களின் பசி நோய் விரைவில் நீங்குவதைப் போலவே நளனைப் பற்றிய கலியும் நீங்கியது.
இருதுபன்னன் குண்டினபுரியை அடைதல்
போர்க்களத்தை விரும்பும் எமனைப் போன்றது ஆண் யானை. அதைப் போன்றவன் அயோத்தி மன்ன்ன். அவன், ஆமைகள் முதுகில் நண்டுகள் துயிலும் தன்னுடைய அயோத்தி நாட்டை விட்டு வீமராசனின் குண்டினபுரியை அடைந்தான்.
வெற்றித் தேரை, உடைய வீமராசனின் அரண்மனை முற்றத்தில் நிறுத்தி முறைப்படி வீமராசனுக்குத் தன் வரவைப் கூறுமாறு வாயிலருக்குக் கட்டளை இட்டான் இருதுபன்னன். பின்னர் தனிமையில் மகிழ்வுடன் அரண்மனைக்குள் சென்றான்.
வீமராசன் இருதுபன்னனை நோக்கி, ‘’மணமுள்ள தேனைக் குடித்துவிட்டு தாமரை மலரில் உறங்கிய வண்டு மீண்டும் எழுந்து நெய்தல் மலரை நாடும் நாட்டின் தலைவனே, நீ இங்கு என்னை நாடி வர என்ன காரணம்?’’ என்று கேட்டான்.
வேற்படை போன்ற கண்களை உடைய தமயந்தியின் மேன் உள்ளம் கொண்ட இருதுபன்னன் உண்மை நிலை தெரியாமல், ‘’மணமலர்களை உடையவனே உன்னைக் காணும்படியான ஓர் ஆசையினால் உன்னிடத்தில் வந்துள்ளேன்’’ என்று சொல்லித் தன் உள்ளத்தை வெளியே காட்டாமல் மறைத்துக் கொண்டான்.
நளன் மடைவாயில் புக்கது
நெய்தல் மலர்கள் நிறைந்த நிடத நாட்டின் தலைவனான நளன் தேரிலிருந்து குதிரைகளை அவிழ்த்து அவைகளைக் களைப்பாற்றி இருதுபன்னனுக்கு உணவு தயாரிக்க மடைப்பள்ளிக்குள் சென்றான்.
நளனை அறிய தமயந்தியின் செயல்
துன்பத்தால் நைந்து போன தமயந்தி தன் தோழியை அழைத்து நள்ளிரவில் தன்னைக் கைவிட்டுப் போன தன் கணவனைக் கண்டறிய அவன் சமைக்கும் தொழில்களைத் தெரிந்து வரும்படிக் கூறினாள்.
மேலும் வளையலை அணிந்த தமயந்தி கோதை சூடிய நெடிய வேலை உடைய தன் குமரனையும் அவன் தங்கையையும் நளன் அருகில் விளையாடவிட்டு அங்கு நிகழ்வதை அறிந்து வரும்படியும் கூறினாள்.
நளனும் அவன் மக்களும்
மதயானைகளின் மன்னனான நளன் தன் மக்களை எதிரே கண்டதும் மனம் நடுங்கினான். அவர்களை எடுத்து தன் தோளோடு அணைத்து, ‘’மக்களே நீங்கள் என் மக்களைப் போலவே உள்ளீர்கள் நீங்கள் யார் மக்கள்?’’ என்று அன்புடன் கேட்டான்.
அதற்குக் குமரனும், ‘’நாங்கள் வளமிக்க நிடத நாட்டு மன்னன் நளனின் மக்கள். எங்கள் அன்னையைக் காட்டில் விட்டு அவன் சென்றதால் நாங்கள் இந்த நகரில் வந்து வாழ்கின்றோம்’’ என்று அழுதபடியே விடை கூறினான்.
கிண்ணங்களைப் போன்ற குவளை மலர்களை உடையது நிடத நாடு. அந்நாட்டின் தலைவனான நளன் உள்ளம் நைந்து வெள்ளம் போலக் கண்ணீர் கொண்டு உயிரிருந்தாலும் செயலிழந்து நின்றான்.
பெரும் தவத்தால் தான் பெற்ற இளவரசனை நோக்கி, ‘’இளவரசே உங்கள் அரசை வேறொருவன் ஆள நீங்கள் இங்கு வந்து வாழ்தல் உங்களுக்குத் தாழ்ச்சி அல்லவோ?’’ என்று வினவினான்.
குமரன், ‘’சமைக்கும் தொழிலை உடையவனே, தீமையான உள்ளம் கொண்டவனே, தம் நெஞ்சினால் இப்படிப்பட்ட சொற்களை நினைப்பதற்குக் கூட மன்னர்கள் ஆசைப்பட மாட்டார்கள். என் தந்தை வாய்மையை வலிமையாகக் கொண்டவர்.
மேலும் ஆதிசேடன் தலை மேலுள்ள இந்த நிலவுலகில் உள்ள அரசர்கள் மதயானைகள் மீது என் தந்தையைக் காண வருவார்கள். அவர்கள் மணிமுடிகள் பட்டுத் தேய்வதால்  ஏற்பட்ட வடுக்களை என் தந்தையின் இரு பாதங்களிலும் காணலாம்’’ என்று பெருமையுடனும் சினத்துடனும் கூறினான்.
உள்ளம் கனிந்து உருகி கண்ணீர் சொரிய இதைக் கேட்டிருந்த நளன் ‘’மன்னர்களின் பெருமையை மடைத்தொழில் செய்பவர்கள் அறிவாரோ? உன்னைப் பற்றி தெரியாது பேசிய என்னைக் கோபிக்க வேண்டாம்’’ என்று தன் தலையைத் தாழ்த்திக் கூறினான்.
தமயந்தியின் துயரம்
இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தன் தோழி தன்னிடம் கூறி முடிக்கும் முன்பே அவள் நிலத்தில் சாய்ந்து அழுதாள். பிறகு தன் தந்தையிடம் இந்நகருக்கு வந்து இருதுபன்னனுக்குத் தேரோட்டியும் சமையலும் செய்கின்றவனே நளன் என்பதை உணர்த்தினாள்.
வீமராசன் நளனை அறிந்தது
வேந்தர்கள் பலர் சூழ வீமராசன் நளனிருக்கும் இடத்தை அடைந்தான். அவனைக் கண்டு இவன் பேச்சுக்கும் செயலுக்கும் பொருந்தாத உருவம் கொண்டிருப்பதைப் பார்த்து  அவனது நுட்பமான பேச்சினாலும் செயலாலும் அவன் நளன் என்பதை உறுதி செய்து கொண்டான்.
நளனை நோக்கி, ‘’பாக்கு மரத்தின் பாளையினைப் பாம்பின் படம் என்று கருதி மந்திகள் தெளியாமல் இருக்கும் நாட்டிற்குத் தலைவனே, உன் மெய்யான உருவைக் காட்டுவாயாக’’ என்றான்.
நளன் தன் உருவம் அடைந்தது
கலியின் செயலால் தனக்கு உரிமையான அரசை இழந்த நளன், முன்பு நாகராசன் தனக்குக் கொடுத்த மென்மையான ஆடைகளுள் ஒன்றை எடுத்து உடுத்தி கொண்டான், மற்றொன்றை எடுத்து போர்த்தி கொண்டான்.
உடனே காதலியைக் கைவிட்டு மறைந்து தேர்ப்பாகனாக வாழ்ந்த பாகன் வடிவம், திருமாலின் உலகளந்த பாதங்களை அடைந்தவர்களின் வினைகள் நீங்குவதைப் போல நீங்கியது.
தந்தையைக் கண்ட இளவரசன் தாமரை போன்ற கண்களில் நீர் துளிர்த்து, மின்னலைப் போனற் இடையை உடைய தன் தங்கையையும் அழைத்து தன் தந்தையின் பாத்த்தில் வீழ்ந்தான்.
பாதி ஆடையோடும் பாய்ந்து வழியும் கண்ணீரும் தன் மார்பகத்தில் சேர்ந்துள்ள புழுதியுமாகச் சென்று தமயந்தியும் கண்ணீர் சிந்தும் நளனின் அடிகளில் வீழ்ந்தாள்.
இந்த உலகில் இவனைப் போன்ற உத்தமர்கள் ஒருவரும் இல்லை என்று கூறி தேவர்களும் புகழ்ந்து மலர்களை மழை போல் பொழிந்து வாழ்த்தினர்.

கருத்துகள்