சீறாப்புராணம்
மானுக்குப் பிணை நின்ற படலம்
சீறாப்புராணம் : சீறா + புராணம் = சீறாப்புராணம்; ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது. சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். உலகில் தூய வாழ்க்கை நடத்திய உத்தமர் ஒருவரின் (நபிகள் நாயகம்) வரலாற்றைக் கூறும் நூலாதலால் இது சீறாப்புராணம் என வழங்கலாயிற்று. இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது.
உமறுப்புலவர் : சீறாப்புராணத்தைப் பாடியவர் உமறுப்புலவர். இவரது தந்தையார் சேகு முதலியார். இராமநாதபுரத்தையடுத்த கீழைக்கரை இவர் பிறந்த ஊராகும். இவர் கடிகை முத்துப்புலவரின் சீடர். சீதக்காதி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப்புலவர் பாடிய மற்றொரு நூல் ‘முதுமொழி மாலை’ என்பதாகும்.
மானுக்குப் பிணை நின்ற படலம் : நுபுவத்துக் காண்டம் என்னும் இந்நூலின் இரண்டாவது காண்டத்தில் உள்ளது இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத்திறத்தை இப்படலம் உணர்த்துகின்றது.
     முகமது நபி ஒருநாள், நகர்ப்புறத்தினைநீங்கிச் செழுமையான மேகங்களைத்  தனது முடியினில் தாங்கியதும், மணமிக்கமலர் வனங்களைக் கொண்ட ஒருமலையினை அடைந்தார்.
            காட்டில்திரியும் விலங்குகளைக் கொன்று அவற்றின் தசைகளைஅறுத்துக் கோலில் கட்டிப் பக்குவமாகச் சுட்டுத் தன்னந்தனியே அவற்றைஉண்டு, தனது ஊனைப் பெருக்கிவரும் வேடன் ஒருவன் இவ்வாறுவேட்டையாடி உண்பதைத் தவிர வேறொரு அறிவும் அற்றவன். 
சிறுசிறுமுத்துக்களாக வியர்வை திகழும்மேனி; ஊன் மணக்கின்ற வாய்; புதர்கள்போல் முடிவளர்ந்த தலை; படுகொலை வீசும் பார்வையுடைய விழிகள், அரபுமொழியில் பேசுபவன். இவ்வாறான வேடன் ஒருவன் காட்டில் பின் தொடர்ந்துசென்று, மான் ஒன்றைச் சினத்துடன் வலையில் பிடித்துக் கட்டிவைத்திருப்பதனை முகமது கண்டார்.
            முகமது நபிகள் மானைக் கண்டபின், அரும்புகளும் தளிரும்மிக்கசோலையையும் காணார்; அருவியையும் காணவில்லை. அருகில் உள்ளநிழலையும் நோக்கார்; தம் மீது ஈச்சங்காயங்கள் மழை போலச் சொரிவதையும்நோக்காராகி மானையே நோக்கிச் சென்றார்.
மானின் நிலை
தரையில் வெள்ளியை உருக்கிவிட்டது போலத் தனது மடியில் பால் சிந்தியது. கண்களில் நீர் பொழிய உடல் பெருமூச்சு விட்டது. திரும்ப முடியாமல் காலில் கட்டுண்டு நிலத்தில் கிடந்தது.
கொடி போன்ற உடலிலும் இரையைப் போன்ற குளம்பிலும் இட்ட சுருக்கினால் வேதனைப்பட்டுக் கிடந்த மானின் உடல் பதைக்கின்ற நிலையை நபிகள் கண்டார்.
அக்காட்டில் உள்ள மலர்கள் செந்தேனைப் பொழிந்தன. அக்காட்சி மானின் துயரத்தைக் காண முடியாமல் கண்ணீர் சிந்துவதைப் போலிருந்தது. 
மானைக் கட்டி வைத்திருந்த வேடனைக் கண்ணால் காண்பதும் பாவம் என்பது போல பறவைகள் தனது  இனத்தோடு கூட்டுக்குள் புகுந்தன.
அப்போது பூக்களில் உள்ள தேனை உண்ட வண்டுகள் இசை பாடின. அந்த இசை முகமது நபிகள் வருவார். வருத்தப்படும்  மானை மீட்பார் என்று கூறுவது  போலிருந்தது. 
நபிகளிடம் பெண்மான் முறையிடல் :
வளம் நிறைந்த அக்காட்டில் தன்னருகே வந்து நின்ற நபியை நோக்கி,தனது குட்டையான வாலை அசைத்து, நெடுங்கழுத்தை நீட்டிக் கறையற்ற நிலவுபோன்றவரே! வள்ளல் முகமதே! என விளித்துப் போற்றித் தடையின்றிஎவர்க்கும் கேட்கும்படியாக, வணங்கிச் சலாமிட்டுப் பின் கூறலாயிற்று :
  “வல்லவனாகிய இறைவனது உண்மைத் தூதரே! விரைந்து எனதுசொற்களை உகந்து கேட்டு உமது அருளைத் தருவீராக!” எங்களுக்கு ஒருஇளங்கன்று வேண்டுமென ஆசைப்பட்டு நானும் என் கலைமானும் இருக்க,நான் கருவுறாததால் வருத்தத்துடன் வாழந்தோம். அப்போது முகமதாகிய உங்கள்பெயரைப் போற்றினேன். எனக்கு இளஞ்சூல் உருவாகிக் கரு வளர்ந்தது.”
            யானும் எனது துணையும் சேர்ந்து ஒன்றானதைப் போன்ற உருவோடு ஓர்இளங்கன்று பிறந்தது. இன்பக்கடலில் ஆழ்ந்து இம்மலையிடத்தைச் சார்ந்துதுன்பம் அகன்றிருந்தேன். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை.எனது உயிர் போன்ற கன்றும் ஆண்மானும் யானும் எங்கள் சுற்றமும்மலைச்சாரலில் ஓரிடத்தில் வயிராறத் தழையுண்டு, பசி தீர்ந்து பின் நீர் அருந்திஎள்ளளவு அச்சமும் இன்றி நின்று உலவிய நேரம்! நாங்கள் நின்றிருந்ததிசையின் எதிரிலிருந்து ஒரு மலைக்குவட்டின்கண், மத யானையும் அஞ்சி இறக்கச் செய்யும் தன்மையுடன் கொடூரமாக இடிமுழக்கம் போன்று நீண்டதாகஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்டு நாங்கள் ஒவ்வொருதிசையிலும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம்.
            தாண்டிச் சென்ற செடிகளும் புதர்களும் நிலத்தில் அழுந்தஒன்றையொன்று சென்ற திசை காணாமல் நாங்கள் ஓடினோம். நானும் எனதுகன்றைக் காணாது வாடிய மனத்தோடும் உடம்பானது ஆடிக்காற்றில்துரும்புபோல் ஆட வேறோர் கானகம் புகுந்தேன். அக்காட்டினைஅடைந்தபோது, அங்கு மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்குசுருக்குஇட்டு, புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தினிடம் சிக்கினாற்போல, நான்உடலுயிர்பதைக்கத் தேம்பி மனமிழந்து ஒடுங்கி நின்றேன்.
மானின் மனநிலை :
            நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் பிறந்தது என்கன்று; இன்னும் புல்லை மேய்ந்தறியாது; நீரும் பருகாது; என் மடியிற் சுரந்தபாலும் வழிந்தது. என் கன்று பூமியில் கிடந்து என்ன பாடுபடுகின்றதோ?அறியேன். எனது கன்று தனது தந்தையாகிய கலைமானிடம்சோ்ந்ததோ?அல்லது வேறொரு புறமாக ஓடிச் சென்றதோ, தன் இனத்தைச்சேர்ந்து பெற்றோருக்காக ஏங்கியதோ? அல்லது புலியின் வாயில் அடிபட்டுஇறந்ததோ? என்னைத் தேடி இங்குமங்குமாக ஓடி மறுகிற்றோ? அறியேனே.
மாந்தர் எவரும் சொர்க்கத்தில் புகச்செய்யும் புண்ணியனே! நான்இவ்வேடனின் பசியைத் தீர்க்கச் சித்தமாக உள்ளேன். அதற்கு முன் என்கால்களைப் பிணித்துள்ள பிணைப்பை நீக்கி என்னைத் தாங்கள் பிணையாகநின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால், என்னுடையகலை மானைச் சேர்ந்து, அதன் கவலையை மாற்றி எனது நிலையை என்இனத்திற்குத் தெரிவித்து எனது கன்றினுக்கு இனிய தீம்பால் ஊட்டி, எனதுகுலத்தோடு சேர்ந்து இருந்து விட்டுச் சில நாழிகைப் போதில் திரும்புவேன்என்று அப்பெண்மான் நபியிடம் குறையிரந்தது.
மானுக்குப் பிணையாக நபிகள் நாயகம் நிற்றல் :
மான் இவ்வாறு உரைக்கக் கேட்ட நபி, மனத்தில் கருணை பொங்க, வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான், இதற்குப் பிணை; எனவே இதனை விடுக” என்றார். 
அதைக் கேட்ட வேடன் சினத்துடன் சிரித்து முட்கள் நிரம்பிய காட்டில் உச்சந்தலையில் உள்ள வியர்வை உள்ளங்கால் வரை நனைக்கும்படி ஓடி எந்த வேட்டையும் கிடைக்காத நிலையில் இந்த மானைப் பிடித்து வந்தேன்.
இந்த மானின் தசையால் என் பெரும்பசி நீங்கியது என மகிழ்வோடு இருந்தேன். முகமது அவர்களே நான் வருத்தப்படும்படி பேசி விட்டீர்கள். நீங்கள் கூறியது எவருக்கும் பொருந்தாது.
மேலும் காட்டில் பிடித்த மானை விட்டு விட்டால் அது மீண்டும் மனிதரிடம் திரும்பும் செயல் முன் எப்போதும் நிகழ்ந்ததில்லை.  ஞானமுடையவர்கள் இவ்வாறு பேசமாட்டார்கள். எனவே குறைவான இச்சொற்களை விடுக. என்றான்
என்னைப் பிணையாகக் கொண்ட இந்தப் பெண்மான்  ஒரு நாழிகைப் போதில் வராவிட்டால், நான் உனது பசியைத் தீர்ப்பதற்காக ஒன்றிற்கு இரண்டாக அன்புடன் தருவேன்! கவலைப் படாதே! என்று இனிமையுடன் நபிகள் உரைத்தார்.
உலகில் ஒரு புதுமையினையோ அல்லது ஒன்றுக்கு இரண்டு மான்களோ கிடைக்கும் என்பதை எண்ணி வேடனும் சம்மதித்தான்.
வேடனின் செயலை மான் தன் கூட்டத்திற்கு உரைத்தல்         
ஒரு வனப் பகுதியினிடத்து எண்ணற்ற பெண்மானும் கன்றும் கலையுடன் இருக்க அக்கூட்டத்தை இனிதே கண்டது – அப்பெண்மான். தன் இனத்தினுள் சென்று சேர்ந்து கவலை நீங்கியது. தனது கலையின் வருத்தத்தையும் போக்கித் தனது கன்றுக்குப் பாலூட்டி, மென்மையான முதுகையும் வாலினையும் நாவினால் நக்கிக் கொடுத்துக் கழுத்தை வளைத்து மோந்து அதன் வேட்கையையும் போக்கியது.
            கன்றிற்கு அமுதம் ஊட்டிய பின்னர்க் காட்டகத்தில் ஓடிச் சென்று, தனது இனத்திற்கெல்லாம் தான் வேடன் கைப்பட்ட வரலாறும், நபிகள் அதை மீட்டுவர விட்டதும் எடுத்துரைத்தது. பிணையாக நபிகள் இருந்தனர் என்ற மொழியைக் கேட்டுப் பிணைக்குலம் அனைத்தும் உள்ளப் பதைப்படைந்து துன்பம் எய்தின. துணையாகிய ஆண்மானும் உடல் சோர்ந்து பெருமூச்சு எய்தி நின்றது. பின்னர் அங்குப் போக வேண்டாம் எனக்கூறியது. தம்மோடு மாறுபட்டவர் கையிலிருந்தும் தப்பி வந்த மானானது, அவரால் தாம் கொல்லப்படுதலை விரும்பி மீண்டும் அத்தகைய மனிதர்கள் கையில் சேர்வதுண்டோ? மறுத்துச் சொல்லாதே. இக்குட்டியை வெறுத்தும் நம் இனத்தைத் துறந்தும் முடிவினை நோக்கிப் போக வேண்டாம் என்னும் முறையினை எடுத்துக் கூறியது.
பெண்மான் எடுத்த முடிவு :
            வலையில் அகப்படுத்திக் கயிறுகளால் பிணைத்து என்னைப் பற்றிய வேடனுக்கும் ஏற்பப்பேசி, தானே பிணையாக நின்றார். பெரியவன் தூதராகிய நபிகள், இவ்வுலகத்தில் எல்லா உயிர்களையும் அணைத்துக் காப்பதற்கு அவரல்லது வேறு ஒருவர் இல்லையல்லவா? எனது உயிரை வேடனது பசிக்காக ஈந்து, நபியினது பிணையை மீட்க நானம் மனம் கொள்ளவில்லையென்றால், நான் சொர்க்கத்தையிழந்து தீ நரகினில் புகுவதேயின்றி எனக்கு வேறு கதியும் பெருமையும் உண்டோ? சிறப்புமிக்க ஆண்டகை நபியின் முன்னர்ச் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலி வாய்ப்பட்டு இறப்பதே கதியாகும். வேறு இருப்பதற்கு இடமும் உண்டோ? எனவே வாழ்வதற்கு எழும் விருப்பத்தினைக் கைவிடல் வேண்டும்.
வேடனின் மனமாற்றம்
மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதனை நபிகள் பெருமான் கண்டு மகிழ்ந்து அன்போடு இருள் கொண்ட மனத்தானாகிய வேடனைக் கூவியழைத்து, ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார் என்றுரைத்தார்.
            அதனைக் கேட்டு வேடன் வியப்பாக நோக்கும்போது, முன் வந்த மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்தன. பின்னர் பெண்மானானது வணக்கம் கூறிப் பாவி எனக்காக வேட்டுவனுக்குத் தங்களையே பிணையாக்கினீர்! இப்போது மீட்டருள வேண்டும் என்றது. இவ்வாறு பக்கத்தில் வந்து பெண்மான் கூற, முகம்மது நபி வேடனை அருகில் அழைத்து அவற்றின் பண்பினைச் சுட்டிக்காட்டி, நீ நம்முடைய பிணையை விட்டுவிட்டு, தனது பசியினைத் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக! என்றார். வேடனும் தான் வீடு பெற்றேன்; வாழ்ந்தேன் என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். 

கருத்துகள்