முத்தொள்ளாயிரம்

                                                 முத்தொள்ளாயிரம்
சங்க மருவிய காலத்து இலக்கியம். சங்க கால அகப்புற மரபுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்நூல் 3 x 300 மொத்தம் 900 பாடல்கள் என்ற பொருள் கொண்டு இதில் 2700 பாடல்கள் இருந்தன என்பர் ஒரு சாரார். மூவேந்தர்களைப் பற்றிய 300 பாடல்கள் மூலம் (3x300) மொத்தம் 900 பாடல்கள் மட்டுமே இருந்தன என்பர் ஒரு சாரார். ஆனால் இன்று 130 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
பாண்டியன்
  • பாண்டிய நாட்டின் மண்ணுக்குள் பொன் இருக்கும். அவனுடைய தலைநகர் மதுரையில் முத்தமிழ்ச் சங்கம் இருக்கும். அவனுடைய கொற்கைக் கடலில் வெண்ணிறச் சங்கும் முத்தும் கிடைக்கும். அவனுடைய பொதிகை மலைச் சாரலில் யானைகள் இருக்கும். இப்படிப்பட்ட வளமெல்லாம் நிறைந்த வலிமை மிக்க பாண்டிய மன்னனின் கூரிய வேலின் நுனி மாலையணிந்த பகையரசர் மார்பைக் குத்திக் கிழிக்கும். 
  • தன்னுடைய வீரத்தாலும் நீதி முறையாலும் உலகில் உயர்ந்த ஆட்சி செய்பவன் பாண்டியன். அவன் ஒளி வீசும் முத்துமாலை அணிந்தவன். அவனது உயர்ந்த வெண்கொற்றக்குடை பகைவர் எவரும் நுழையாதவாறு நாட்டைப் பாதுகாக்கின்றது. எனவே பொன் அணி பூண்ட தேவர்களும் மண்ணுலகில் பாண்டியனுடைய பூமியில் கால் வைக்கத் துணியமாட்டார்கள்,
  • வண்டுகள் மொய்க்கும் குவளை மலர்கள் நாள்தோறும் அகன்ற குளத்தில் நீராடி தன் ஒற்றைக் காலால் நின்று தவம் செய்துள்ளன. அதன் புண்ணியத்தால் தான் அவை பாண்டியன் மார்பில் புரளும் தகுதியைப் பெற்றன.  இந்தப் பூக்கள் செய்த புண்ணியத்தை நான் செய்யவில்லையே என்று தலைவி பாண்டியன் மார்பில் மாலையாய்ப் புரள இயலாததை எண்ணி வருந்துகிறாள். இப்பாடலில் அப்பெண்ணின் கைக்கிளை மோகமும் ஏக்கமும் வெளிப்படுகின்றன. (கைக்கிளை – ஒரு தலைக் காதல்)
சோழன்
  • சோழனின் யானைக்குப் பகை மன்னர் கொடி பறக்கும் கோட்டை மதில் சுவரில் மோதித் தந்தங்கள் முறிந்தன. பகையரசர் பலர் மணி முடிகளைப் போரில் இடறியதால் கால் நகங்கள் தேய்ந்தன. இதனால் வலிமை மிக்க தோள்களை உடைய கிள்ளியின் போர் யானை பெண் யானைக்கு முன்பாக வர நாணப்பட்டு கதவிற்குப் பின் மறைந்து நின்றது. சோழநாட்டில் விலங்குகளுக்கும் உயர்பண்பான நாணமும் உண்டு என்பதையும் எனினும் போரில் வெகுண்டெழுந்து தன் பகையை அழிக்கும் சினமும் உண்டு என்பதையும் இப்பாடல் விளக்குகிறது.
  • செம்பயின் மரபில் வந்த சோழ வேந்தனான இவன் போரிட்டு வென்ற போர்க்களத்தின் தன்மைகளாவன: பேய்மகள் போர்க்களத்தில், தலைமுடியுடன் கூடிய வெண்மையான மண்டை ஓட்டை அகலாகவும் அதன் உள்ளிருக்கும் மூளை அகலில் விடும் நெய்யாகவும், துண்டு பட்ட குடல்களை விளக்கின் திரியாகவும் ஒவ்வொரு உடலாக எடுத்துக் கொண்டு விளக்கிடுவாள். இப்பாடல் போர்ககளத்தில் பகைவர்கள் அனைவரும் மடிந்ததனைச் சுட்டுகிறது.
  • ஒளி விளங்கும் இலை போன்ற வடிவுடைய வேலேந்திய கிள்ளி வளவன் பிறந்த ரேவதி நட்சதிர நன்னாளில், அந்தணர்கள் ஏராளமான பசுக்களையும் பொன்னையும் பரிசாகப் பெற்றனர். பாடும் புலவர்கள் மலை போன்ற பெரிய உயர்ந்த ஆண் யானைகளைப் பரிசாகப் பெற்றனர். இப்படி அனைவரும் சோழ நாட்டில் மகிழ்ந்திருக்க சிலந்தி பூச்சி மட்டும் தான் இருந்த கூட்டையும் இழந்து தவிக்கின்றது. சோழனின் பிறந்தநாளை  அந்நாடே துப்புரவு செய்த விழாவாகக் கொண்டாடிய செய்தியினை இப்பாடல் விளக்குகிறது.
சேரன்
  • வானுக்கு இணையாக மண்ணகம் விளங்குகிறது. விண்ணில் உள்ள நட்சத்திரங்களைப் போல மண்ணில் வீரமிக்க மன்னர் பலர் உள்ளனர். நட்சத்திரங்களுக்கு நடுவே வெண்ணிலவு விளங்குவதைப் போலவே பெருமைக்குரிய சேரன் விளங்குகிறான். அவன் விண்ணை முட்டும் அளவிற்கு வளர்ந்துள்ள கொல்லி மலைக்கு அரசனாவான்.
  • சேறும் நீரும் நிறைந்த வயல்வெளிகளில் அறுவடை முடிந்த காலங்களில் செக்கச் சிவந்த ஆம்பல் மலர்கள் மலர்ந்துள்ளன. சிவந்து குவிந்திருந்த செவ்வாம்பல் விரிந்து மலர்ந்து வயல் எங்கும் நிறைந்துள்ளது. இக்காட்சி வயலில் தீப் பற்றியதைப் போல அங்கு வாழும் பறவைகளுக்குத் தோன்றியது. எனவே அப்பறவைகள் பாதுகாப்பான வேறு இடத்திற்குச் செல்லும் போது கைகளாகிய சிறகுகளால் தம் குஞ்சுகளைத் தூக்கிக் கொண்டு பறக்கின்றன. அவ்வாறு பறக்கும் போது எழும் ஆரவார ஒலி நிறைந்தது சேரநாடு. சேரநாட்டின் அமைதியை இப்பாடல் உணர்த்துகின்றது.
  • காளையை ஊர்தியாக உடையவன் சிவபெருமான். அவனும் பகையைப் போர்க்களத்தில் வெல்லும் சேரனும் வலிமை மற்றும் முயற்சியினால் ஒத்திருக்கின்றனர். என்றாலும் ஒன்றில் மட்டும் இருவரும் வேறுபட்டுள்ளனர். காலனைப் போலக் கொலை செய்யும் மழுப்படையை உடைய சிவபெருமானுக்கு மூன்று கண்கள். ஆற்றல் பொருந்திய சேரனுக்கு இரண்டு கண்கள் மட்டும் உள்ளன என்று சேரனின் தோற்றத்தில் மயங்கிய பெண்ணின் கைக்கிளைப் பாடல் இது.

கருத்துகள்