முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு
வளம் பொருந்திய மலைக்கு ஒப்பாகச் சொல்லப்பட்ட திருமேனியையுடையவன் திருமால். அவனது நாட்டு வளத்தைப் பேசுவதற்குப் பள்ளியர்கள் அழகிய நாவினை அசைத்துத் தொடங்கினார்கள். பாட்டின் வளமெல்லாம் பொருந்த, நம்மாழ்வார் திருமால் மீது அருளிய பூமாலைகளாம் பாமாலைகளின் சிறப்பினை உழவர்கள் பாடத் தொடங்குகின்றனர்.
     உயரமான இடத்தில் ஏறி நின்று தன் கால்களைத் தரையில் ஊன்றி நின்று தோகைகளை விரித்து நின்று வானத்தைப் பார்த்த்து மயில்.  அந்த மயிலைக் கண்டு மாமரத்தின் கிளையில் இருந்து வசந்தகாலத்தை உணர்த்துவதற்காகக் கூவ நினைத்த பெண்குயில், மயிலின் நடனம் கண்டு கூவுவதைக் கைவிட்டு வாயை மூடிக் கொண்டது. கோடைக்காலம் நிறைவு பெற்று வசந்தத்தின் அறிகுறிகள் தெரிந்ததும் நீர் சுமந்த மேகம் மழைத்துளிகளை உதிர்த்தது. அதனால் எங்கும் மண் வாசனை வீசியது. மக்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் வளமை உடையது வடகரை ஆசூர் நாடு.
     வெற்றி பெற்று விடுவேன் என்ற வீரத்துடன் இரண்டு யானைகள் எழுவது போல மேகங்கள் திரண்டு நிலவை மறைத்தன.  ஒளிந்து கொள்ள குன்றுகள் பொருந்தாது என்று நினைத்த ஆடவர்கள் பூங்கொடி போன்ற அழகினை உடைய காதலியரின் கொங்கைகளில் ஒளிந்து கொள்வர். காதலர்களை இணைத்த இளவேனிலின் வருகையை மாமரத்தில் வாழும் குயிலுக்கு அறிவிப்பதற்காகத் தென்றல் காற்று மன்றங்களை நாடிவரும். அத்தகைய மகிழ்ச்சி உடையது தென்கரையில் அமைந்துள்ள சீவலப்பேரி நாடாகும்.
     ஆசூர் நாட்டில்ல கறை என்பது வெண்மையான கதிர்களை உடைய நிலவில் மட்டுமே இருக்கும். கம்பத்தில் பிணிக்கப்பட்டிருப்பவை யானைகள் மட்டுமே. சிறைபட்டிருப்பது வானில் பறக்கும் பறவைகள் மட்டுமே. திரிக்கப்பட்டிருப்பது நெய்விளக்கேற்றும் திரி மட்டுமே. குறைவுபட்டிருப்பது பொற்கொல்லர்களின் அம்மி மட்டுமே. குழைகளைக் கொண்டிருப்பது பூங்கொடிகள் மட்டுமே. 
        சீவலமங்கை நாட்டில் சூரியன் மட்டுமே தன்னுடைய கதிர்களால் காய வைக்கும் தன்மை உடையதாய் இருக்கும். வெண்கட்டித் தயிர் மட்டுமே மத்தினால் கடையப்படுவதால் கலங்கும். அழிந்து போவது நாழிகைகளும் வாரங்களும் மட்டுமே. சுழன்று வருவது வான்மழையால் பெருகிய வெள்ளம் மட்டுமே. சுமை தாங்க இயலாமல் சாய்வது நெற்கதிர்கள் மட்டுமே. ஒடுங்கி இருப்பது தவம் செய்வோரின் மனம் மட்டுமே. தேய்வது சந்தனம் மட்டுமே.
     உயரமாக வளர்ந்திருக்கும் தென்னை மரங்களில் காய்த்திருக்கும் இளநீர்க் காய்களை  அருகில் வளர்ந்திருக்கும் பாக்குக்குலைகள் தாங்கிக் கொள்ளும். பாக்குக் குலைகளை அருகில் வளர்ந்திருக்கும் மாமரக் கிளைகள் தாங்கிக் கொள்ள மாங்கனிகளை அருகில் வளரந்திருக்கும் பலாமரம் தாங்கிக் கொள்ளும். பலாக்கனி அருகில் வளர்ந்திருக்கும் ஒளிமிக்க குலை உடைய வாழையைச் சார்ந்திருக்கும். வாழைக்குலை வளைந்து அதனைத் தாங்கி நிற்க அருகில் இருக்கும் மாதுள மரத்தின் கிளைகள் வாழைக் குலையைத் தாங்கும். 
     தாமரை மலர் தலைநீட்டி வரப்பினில் வளர்ந்திருக்கும் பச்சை இஞ்சிச் செடியில் சடையான தோகைகளைத் தீண்ட இஞ்சித் தோகைகள் அருகில் வளர்ந்திருக்கும் மஞ்சள் செடியின் பசிய தோகைகளின் கழுத்தை மெல்லத் தடவித் தொட மஞ்சள் செடியின் தோகைக அருகே அசைகின்ற நெற்கதிர்கள் அருகில் வளர்ந்திருக்கும் கரும்புக்குக் கை கொடுப்பது போல் வளர்ந்து செழித்திருக்கும்.

கருத்துகள்