சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம் - மனையறம்படுத்த காதை
சிலப்பதிகாரம் - மனையறம்படுத்த காதை
     புகழ்வாய்ந்த சிறப்பும் ,அரசரும் விரும்பும் செல்வமும் உடையவர் பரதர்.இவர்கள் மிகுதியாக வாழும் பூம்புகார் நகரம்,எல்லா பயன்களும், நீண்ட பரப்பினையும் உடைய மாநகரமாக விளங்கியது.அலைகள் முழக்கமிடும் கடல்களுக்கு அப்பால் உள்ள உலகினர் எல்லோரும்,ஒன்று கூடி வந்தாலும்,அவர்கள் விரும்பும் விருந்தினை சலிப்பின்றி அள்ளிவழங்கும் வளம் உடையது.
               கடல் வழியாகவும்,தரை வழியாகவும் வாணிபம் செய்து, பல்லாயிரம் பொருட்களைக் குவித்த,செல்வந்தர்களாக அங்கிருந்த வாணிகர்கள் திகழ்ந்தனர்.
கண்ணகியும் ,அந்த நகரில் எழுநிலை மாடமொன்றில், நான்காம் மாடத்தில், மயன் செய்தது போன்ற அழகிய கால்களுடைய கட்டிலின் மேல் அமர்ந்திருந்தனர். செங்கழுநீர் மலர்;ஆம்பல் மலர்; குவளை மலர்; தாமரை மலர்;மற்றும் வயல்வெளி நீர்நிலை மலர்கள்;மேன்மை பொருந்திய தாழையின் விரிந்த வெண்ணிறப் பூவிதழ்கள்; செண்பகச்சோலையில் அழகு மாலை போன்று இதழ்விரித்து மலர்ந்திருக்கும் குருக்கத்தி மலர்கள், ஆகியவற்றில் உள்ள தாதுக்களை உண்ட மகளிரின் சுருண்ட கூந்தலின் நறுமணம் நுகர்ந்திட வண்டுகள் சுழன்று திரிந்தன.
அவ்வண்டுகளுடன், தென்றலும்,தம்பதியர் வீட்டினுள்,முத்து மணிகளால் அலங்காரம் செய்யப்பட்ட சாலரமொன்றின் வழியாக நுழைந்தது. தென்றலின் வரவைக்கண்ட கோவலனும் கண்ணகியும் மிகவும் மகிழ்ந்து,காதலின் மிகுதியால் கூடிட விரும்பி, ஐந்து மலரம்புகளைச்  மன்மதன் இருக்கும், நிலா முற்றத்துக்கு ஏறி சென்றனர். வண்டுகள் சுவைக்கும் வாசனைப் பூம்படுக்கையின் மேல் கோவலனும்,கண்ணகியும் சென்று அமர்ந்தனர்.
கோவலன் கண்ணகியின் பெரிய தோள்களில், கரும்பையும்,வல்லிகொடியையும் எழுதினான். இந்த கட்சி,முதிர்ந்த கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும்,தம் கதிர்களால் ஒளியேற்றும் சூரியனும், சந்திரனும் ஒரு சேர இருந்தது போல இருந்தது.
வண்டுகள் மொய்க்கும் மலர்ந்த மல்லிகைப் பூக்களால் தொடுத்த மாலையினைக் கண்ணகி அணிந்திருந்தாள்.கோவலன்,இதழ் முறியாத செங்கழுநீர் மாலையினை அணிந்திருந்தான்.இருவர் மார்பிலும் இருந்த மாலைகள்,தம்முள் கலந்து மயங்கின.
அந்நிலையில்,ஆராத காதலுடன்,தன் மனைவியின் முகத்தை கோவலன் நோக்கினான். அவள் நலனை பெரிதும் பாராட்ட தொடங்கினான்.
இளம்பிறை நிலவானது,தேவர்களும் போற்றும் சிவபெருமானின் சடைமேல் முடித்த பெருமையினை உடையது.ஆனால் அது,திருமகளான உன்னுடன் பாற்கடலில் பிறந்த உடன்பிறப்பல்லவா! அதனால் தான்,அது உனக்கே உரியது என இறைவன்,அதனை உன் நெற்றியாகத் தந்தானோ?
போர்க்களத்தில் தம்மை எதிர்க்கும் பகைவர்க்கு,படைகலங்கள் வழங்கிப் போர் புரிய சொல்லும் ஒரு முறை உண்டு.அதைப்போலவே மன்மதன் தானும் தம் கரும்புவில்லை,உன் இரு புருவங்களாகத் தந்தானோ?
தேவருண்ணும் மருந்தாகிய அமிழ்தத்திற்கு முன்னே பிறந்த இலக்குமி நீ என்பதால்,தேவர் கோமான் இந்திரன் தன் கைக்கொண்ட வச்சிரப்படையை உன் இடையாகத் தந்தானோ?
ஆறுமுகம் கொண்ட ஒப்பற்ற முருகன் என்னுடன் போர் புரியும் ஒரு முறையும் இல்லாதவன்.அப்படி இருந்தும்,உன்னை கண்டு நான் துன்புற வேண்டும் என,தன் அழகிய சுடரையுடைய நெடிய வேலை,உன் கடை சிவந்த குளிர்ச்சி பொருந்திய இரு கண்களாகத் தந்தானோ?
கரிய பெரிய தோகை உடையதும்,நீல நிறம் கொண்டதுமான மயில்,நின் அழகிய சாயலுக்கு அஞ்சி தோற்றுக் காட்டுக்குள் சென்று அடைந்து விட்டது!
நல்ல நெற்றி உடையவளே!
அன்னம்,நின் மென்மையான நடைக்கு அஞ்சி செயலிழந்து,நல்ல நீரினையுடைய வயல்களிடையே மலர்ந்திருக்கும் மலர்களிலே சென்று ஒளிந்து கொண்டது!
நின் மொழிக்குத் தோற்றுப் போன பசுமை நிறமுடைய சிறிய கிளி இரக்கத்துக்குரியது!
குழலிசையோடு, யாழிசையோடு அமிழ்தமும் சேர்ந்ததைப் போல நின் மழலை பேச்சிற்கு அவை வருந்தி சோர்ந்தன.
எனினும் மென்னடையினை உடைய மாதரசியே!
நறுமண மலரினை சூடிய கோதையே!
உனக்கு அலங்காரம் செய்தவர்கள் இயற்கை அழகு பெற்ற உன்னை மங்கல அணி இருக்க பிற அணிகலன்களை அணிவித்தது ஏன்?
நின் கருங்கூந்தலுக்குச் சில மலர்கள் மட்டும் சூட்டினால் போதுமே. மாலையையும் சூட்டியிருக்கின்றனரே! அம்மாலையோடு அவர்களுக்கு என்ன உறவோ?
நின் கூந்தலை மணமாக்க அகிற்புகையின் நறுமணமொன்றே போதுமே. கஸ்தூரிக் குழம்பு ஏன்?
அழகுத்திரு மார்புகளுக்கு அணி செய்திட,தீட்டிய கோலங்களே போதுமே, முத்து வடம் ஏன்?
மதி போன்ற நின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிடவும்,சிறிதான நின் இடை துவண்டு வருந்திடவும்,மென்மேலும் உன் மீது அணிகலன்கள் பூட்டுகின்றனரே,இவர்களுக்கு என்னதான் நேர்ந்தது?
குற்றமற்ற பொன்னே! வலம்புரிச் சங்கிலே பிறந்த முத்து போன்றவளே! குற்றமற்ற மணப்பொருள் தரும் தெய்வ மணமே! இனிமையான கரும்பை போன்றவளே! தேனினும் இனிமையுடையவளே! பெறுவதற்கு அருமையான பாவையே! இன்னுயிர் காக்கும் மருந்தே! பெருங்குடி வணிகனின் பெருமை வாய்ந்த மகளே!
நின்னை ,
மலையிடையிலே பிறவாத மணியே!’,என்று சொல்வேனோ?
அலையிடையே பிறவாத அமிழ்தமே!’,என்று சொல்வேனோ?
யாழிடையே பிறவாத இசையே!’,என்று சொல்வேனோ?
நீண்டு தாழ்ந்த கருங்கூந்தல் உடைய பெண்ணே!நின்னை நான் எவ்வாறு சொல்லித்தான் பாராட்டுவேனோ?
எனப் பலவாறு பாராட்டினான்,கோவலன்.
இப்படி இல்லறம் பேணி வந்த அக்காலத்தே,ஒரு நாள்
நீண்டு தழைத்த கூந்தலையும்,பெருந்தன்மையான பண்புகளையும் உடையவள் கோவலனின் அன்னை. தம்பதியர்,
சுற்றத்துடன் இணைந்து வாழ்தல்;
துறவியரை பேணுதல்;
விருந்தினரை உபசரித்தல்
ஆகிய பெருமைகளுடன்,இல்வாழ்க்கையும் சிறப்புப் பெற்று,மென்மேலும் பல்வேறு செல்வங்களும் பெற விரும்பி,அவர்களைத் தனிக் குடும்பமாக அமர்த்த எண்ணினாள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளுடனும்,பணியாட்களுடனும், அவர்கள் தனிக் குடும்பம் நடத்த ஏற்பாடு செய்தார்.
தம்பதியரும்,அவ்வாறே தனிமனை புகுந்து,இன்புற்று வாழ்ந்தனர்.கண்ணகி பேணிய இல்லறப் பாங்கினை கண்டவர் பாராட்ட,ஆண்டுகள் சில கழிந்தன
வெண்பா
உலக வாழ்கையில் நிலையாமை உறுதி’,என்ற உண்மையை அறிந்தவர் போல,தம்முள் பிரிதலின்றி இணைந்து இன்புற்று வாழ்ந்தனர்.சினத்துடைய பாம்புகள் ஒன்றோடொன்று பிணைந்து தழுவிப் பிரியாது இருப்பது போலவும்,காமனும் ரதியும் ஒருவரோடொருவர் பிரியாது தழுவி கிடந்தது போலவும்,இன்பங்கள் முழுதும் துய்த்திடும் நோக்கில்,மனம் ஒன்றி கலந்தவராக வாழ்ந்து வந்தனர்.

கருத்துகள்